புற நெறிக் கருமங்களிலிருந்து நீவிர் துணிவுடன் கை கழுவிய பின் இவ்வருள் வாக்கு உமக்குப் பொருந்தும்.
கருநிலையாய் உம் இருதய நடுவில் ஒளிவிலிருந்த ஆதிச் சுயம்புத் தந்தை இன்று முழுதாய் வெளிப்பட்டு, அகண்ட அனக வெளியாய் உம்மைச் சூழ்ந்து விட்டது.
உம் உயிர் போதிச் சுயம்புத் தாய்மையென்னும் உயிர்நிலை வாலையம்மையாய் பரிபூரண மெய்ஞ்ஞானமாய் அகண்டு கருநிலைத் தந்தைச் சுயம்பு சமேதமாய் உம்மைச் சூழ்ந்து விட்டது.
உம் மெய் சுயம்புத் தாய் தந்தையின் அரவணைப்பில் சேயாக, நீவிர் கருமங்கள் யாவுங் கழுவப்பட்டுக் கரைக்கப்பட்டு, தரும நிலையில் ஏற்றப்பட்டுப் பிறவா நிலையடைந்தீர்.
உம் மெய் இறவா நிலையடையும் பேரற்புத இரசவாதம் இனி சுயம்புத் தாய் தந்தையால், சேயாகிய உம் மெய்யில் நடத்தப் பெறும். ஜோதி சுயம்பு ஆயிரம் என்னும் அனந்த சுயம்புகள் உம் மெய்யின் அணுக்களிலிருந்து வெளிப்படும் பேரதிசயம் இது.
வாழ்த்துக்கள்
சுயம்புத் தாய்மை மற்றுந் தந்தை நிலையிலிருந்து யாம் உமக்கு உணர்த்தும் வாய்மை இது. இனி எம் பொறுப்பில் எம் அரவணைப்பில் நீவிர் இருப்பதால், எம் துணிவே துணையாய் இன்புற்றிருப்பிர். நீவிர் எமக்களித்த அனுமதிக்கும் உம் பரிபூரண சரணாகதிக்கும் எம் நன்றிகள்
நீவிர் எம்மால் ஏற்றப்பட்டிருக்கும் தரும நிலையை சகச நிலையில் கவனங் கொள்ளுங்கள்.
உயிர்நிலை தாய்மைச் சுயம்பு போதி வாலையே இனி உம் சூக்கும சரீரம்.
இருள்சேர் இருவினைகள் சேரா தூய உயிர்நிலையே இனி உம் சூக்கும சரீரமாகையால், உம் தூல தேகத்தில் அற்புதப் பரிமாற்றங்கள் நடந்து, அது சுயம்பு ஆயிரம் என்னும் ஜோதிச் சுயம்பு மெய்ந்நிலையை சத்தியமாய் அடையும்.
மனித குலம் முழுமைக்கும் இவ்வருள் வாக்கு பொதுவில் வைக்கப்படுகிறது.
புறநெறிக் கருமாந்திரங்கள் அனைத்தையும் கைகழுவி, சுயம்பு வள்ளன்மையின் அக-அனக நெறியை முழுதாய்க் கைக்கொண்டு, தரும நிலையில் சுயம்வுவால் ஏற்றப்படும் இவ்வரிய வாய்ப்பைத் தேர்வு செய்க! பின் சுயம்பின் இவ்வருள் வாக்கை ஏற்க! உம் பொறுமைக்கு நன்றி.
No comments:
Post a Comment