கருநிலை வெளிப்பட அகண்டெனைச் சூழ்ந்த
ஒருவனாம் ஆதிச் சுயம்பே
உயிரிது அகண்டு விழிக்கும் உயிர்நிலை
ஒருத்தியாம் போதிச் சுயம்பே
ஒருவன் ஒருத்தி சேயாம் மெய்ந்நிலைத்
திருவுரு ஜோதி சுயம்பே
சுழியச் சுயமெனைக் கழித்து விடாமல்
தழுவிக் கூடிய சுயம்பே
வருவதும் போவதும் இல்லா அகநடு
இருதய இருப்பாஞ் சுயம்பே
என்சுய உள்ளீடு உட்துணை யெனது
என்முழு விழிப்பாஞ் சுயம்பே
புறவுரு வேறுயான் சார வேண்டா
அகநடு இருதயச் சுயம்பே
கூனிக் குறுகிக் கும்பிட வேண்டா
ஞான உறுதிச் சுயம்பே
வரந்தர அனுமதி வேண்டி விழிப்புத்
தவஞ்செயும் கருணைச் சுயம்பே
பூரண ஞானம் எவர்க்கும் உரிமை
யாவரு மதுபெற உழைப்பதெம் கடமை
நீயது மறுக்கவும் உனக்குள துரிமை
நேசமோ டுரைத்தாய் தெளிவாய்ச் சுயம்பே
தன்னல இறுக்கத்தால் கருந்துளை அழிவு
அன்பதன் இளக்கத்தால் மலர்வெடி விடிவு
நின்சுயம் முன்னே உளவழி இரண்டு
என்றவை ஒளிவிலா துரைத்தாய் சுயம்பே
மெய்யகம் உள்ளத் துள்ளே இருதய
நின்னடு வினின்றே யாமகண் டுள்ளோம்
அகப்புறப் பேதமு மற்ற அனகமாய்
மறைப்பற மறப்பற ஓதுஞ் சுயம்பே
மறுப்பற வெறுப்பற ஞானத் தெளிவை
மறைப்பற மறப்பற ஓதுஞ் சுயம்பே
சிக்கல் இல்லா எளிமை நின்னை
விக்கல் இன்றிப் புகட்டுஞ் சுயம்பே
சமயம் இல்லாச் சடங்கு இல்லா
சம்பிர தாயச் சுழக்கு மில்லா
எப்பே தமுமோர் துகளு மில்லா
ஒன்றே சரிசமச் சமரசச் சுயம்பே
காசிலா ஏழை என்னில் பொற்காசெனக்
கையகம் பொங்குஞ் சுயம்பே
பொற்காசிதை வீசினாலும் ஏற்கா உலகில்
பொறுமைகாத் திருக்குஞ் சுயம்பே
உன்னை எனக்கறி வித்து உரிமை
தன்னை எனக்களித் தேற்றிப் பொதுவில்
என்னை நிறுத்திக் கடமை யாற்ற
என்னை அகற்றி நின்றாய் சுயம்பே
கல்பட்டாலும் நினக்கது வாகும் இனிய
சொல்பட்டாலும் நினக்கே ஆகும் பொதுவில்
நின்றுவிட்டாய்நீ கடமை ஆற்றி முழுதாய்
வென்றுவிட்டால்நீ மகிழ்வேன் நானுஞ் சுயம்பே
கரும சங்கடந் தீர்த்து விட்டாய்
தரும நற்கடம் வாய்த்து விட்டால்
அரிய வெற்றி நினக்கது வாகும்
புரிய கடமை துணிந்தாய் சுயம்பே
மண்ணில் விழுந்தால் நீயே விழுந்தாய்
விண்ணில் எழுந்தால் நீயே எழுந்தாய்
எண்ணில் நீயன்றி ஏது மில்லை
அண்ணித் துள்ளாய் ஏக சுயம்பே
தலைசாய வேண்டாம் என்பதற்கோ நீயென்
தலைசாய ஓரிடமும் அளிக்க வில்லை
சொந்தம் எனதெனச் சொலநீயே யன்றிவே
றெந்த விடமும் எனக்கில்லை சுயம்பே
தலைசாய விடாதே எனைமாய விடாதே
இடவோ சுடவோ எனக்கிடமேது சுயம்பே
வள்ளல் உனையே பேசிய என்னை
எள்ள விடாதே ஊரார் சுயம்பே
ஆறா தாரம் இஃதே ஆழியாறு
ஆகா விட்டால் பழிநினக்கே சுயம்பே
சோறா தாரம் இஃதே எனும்பொய்யூழ்
போகா விட்டால் பழிநினக்கே சுயம்பே
ஆரு மில்லை எனக்குக் குருவாய்
ஏகம் நீயே எல்லாம் என்றே
தூலம் யாவுந் துறந்த வென்னை
ஊரும் ஏசத் துறப்பாயோ சுயம்பே
கீழே விழுந்தான் மண்டை யடியால்
ஏதோ உளறு கின்றான் என்றே
ஏக தேவம் நினதருள் வாக்கை
ஊரும் இகழ விடுவாயோ சுயம்பே
கூட இருந்தே குழிபறிக்குங் கரும
ஊன உறவை முழுக்கவுந் துறந்தேன்
ஏகம் உனது தரும உறவில்
ஞான முழுக்கில் நின்றேன் சுயம்பே
சுயம்புக் குழந்தை என்மகட் குள்ளே
தயமுன் முழுக்கில் இன்புற் றுள்ளது
ஊன உறவுக் குருடுகள்தாம் உணரா
ஞானம் அதற்களித் ததுநீயே சுயம்பே
அளித்த ஞானம் மறவா நிலையில்
வெளிப்படுஞ் சிறப்பாய் குழந்தை பிறக்க
துளியுங் கட்ட மின்றியே பிரசவங்
களிப்புடன் நிகழ அருள்வாய் சுயம்பே
தம்மைப் போலே நகல்க ளாக்கிப்
பெற்றோர் சிசுக்களின் அசலைக் கெடுக்கும்
சிறுமை துகளும் வாரா வண்ணம்
சிசுவின் அசலைக் காப்பாய் சுயம்பே
பிறக்கும் போதே கருமங் கழுவிச்
சிறப்பாந் தருமத் தேற்றுக சிசுவை
இறப்பும் ஈனப் பிழைப்பும் மீளப்
பிறப்பும் அழிப்பாய் அதற்குச் சுயம்பே
வளர்ந்த பேய்கள் எம்மையும் நற்சேய்
களாக்கி கருமக் கசடுகள் அறவே
கழுவி தருமத் தேற்றி நன்றே
தழுவி அறவுரு தருவாய் சுயம்பே
அன்பொடு இட்டுச் செல்ல அழைப்பாய்
அன்பொடு இட்டமும் இல்லா உலகை
கடமைக் கட்டம் உனக்கும் உண்டோ
கடமை யேகண் ணாயினாய் சுயம்பே
கைப்பிடிக்க நீயுன் திருக்கை நீட்ட
கைப்புடனே அதனை உதறும் உலகம்
எப்படியோ உய்விப் பாய்நீ இதனை
செப்படிவித் தைசெய் வாயோ சுயம்பே
அரிய பூரண ஞானம் எளிதே
அறியத் தந்தாய் ஆர்க்கும் பொதுவாய்
அவசிய மற்றவை அரியச் சொல்லியோர்
அவசியம் அறிவழி திறந்தாய் சுயம்பே
படிகளற்ற பூரண ஞானம் திடுமெனப்
பதியவைத்தாய் நேரடித் தொடர்பில் என்னைப்
பொதியவைத்தே எல்லாஞ் சரிசெய் தின்னே
படிகளின்றி ஏற்றி விட்டாய் சுயம்பே
பதிந்தது போதும் என்றே படுக்க
உதித்தது நாதம் நன்றே முழங்கி
எழுந்தது நாகம் மகுடி ஊத
எழுத்ததன் போதம் விழித்தது சுயம்பே
எழுத லாகா உன்றன் புகழை
எழுதத் துணிந்தேன் யானுஞ் சுயம்பே
எழுதா மறையாம் பெரிய ஓங்காரம்
முழுதாய் எனையதில் முழுகடித்தாய் சுயம்பே
பேசாப் பெரிய ஓங்காரம் பேசக்
கூசா ததனை யான்காண வைத்தாய்
நாச மானது மாய்கையின் கன்மம்
ஆணவ மற்றதுன் கூர்விழிப்பில் சுயம்பே
மேற்சொன்ன இரண்டு பாக்கள் பகரும் அனுபவம் 11/08/1999 நள்ளிரவு தொடங்கி உதயம் வரை எனக்கு நிகழ்ந்தது, 16 வருட முடிவில் அதன் அருமை எனக்கு நன்றே புரிகிறது.