Sunday, June 26, 2016

சத்தித் திருட்டு

மனம் உயிரிலிருந்து அதன் சத்தியால் வெளிப்படுகிறது. உலகியல் பற்றி அல்லலுறுகிறது. மனமாகிய உயிர் சத்தியை உலகியல் பற்றுகளிலிருந்து விடுவித்து உயிரில் மீளச் சேர்த்தலே மனந் திருப்புதல், மனந் திரும்புதல். அப்போது உயிர் தன்னை அறிகிறது, அடுத்து உயிராகிய தனக்கு உயிராகிய தன் 'ஐ'யாகிய சுயம்புத் தலைமையை அறிகிறது(அகர சுத்த சிவ சமேத இகர அருட்சத்தி சமேத குருவாகிய தலைமை)
தன்னை மற்றுந் தன் ஐ அறியாக் கேட்டிலிருந்து விடுதலை பெறுகிறது.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே

திருமூலர் வாக்கை நோக்குக

புறவுரு நாட்டத்தால், தூலப் பற்றால் உயிர் சத்தியை மனம் நாசஞ் செய்கிறது, நாசமாகும் அவ்வுயிர் சத்தியை மனத்தை உயிரின் பால் செலுத்தும் அக நெறியால் தான் உயிர் தன்னையும் தன் ஐயாகிய தலைமை சுயம்பு குருவையும் உணர்ந்து அனக நெறியில் தானும் உய்ந்து, தான் உயிர்ப்பிக்கும் மெய்யையும் உய்விக்க முடியும்

எனவே மனந்திரும்புதல் திருப்புதல் அத்தியாவசியமாகிறது

மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியங் கைவசம் இருக்கிறது. இயேசு பிரானின் வேத வாக்கியம் இது சுட்டும் பரலோகம் இருதய நடுச் சுயம்பு குருவின் அருளாதார சத்தியப் பேருலகம்.

சிலப் புறவுரு உபதேசிகளுக்குக் கோடிக் கணக்கில் சீடர்கள் இருப்பதால், அவ்வுபதேசிகளுக்கு வசிய சத்தி மிக அதிகமாகி விடுகிறது, சீடர்களின் மனங்கள் வாயிலாக அவர்களின் உயிர் சத்தி தொடர்ந்து உறிஞ்சப்படும் சத்தித் திருட்டால் இது சாத்தியமாகிறது. இது சீடர்களின் சூக்கும சரீர சக்கரங்களில் உபதேசி கொக்கி போடுதலால் செயல்படுத்தப் படுகிறது. கவனம்!

புறவுருச் செருகல்
பலவும் உருவும்
உட்குரு நாதா
சற்குரு சரணம்

செருகல் = சக்கரக் கொக்கி

புறவுரு நாட்டம்
அழித்தெனை யாண்ட
உட்குரு நாதா
சற்குரு சரணம்

செருகல் உருவித் தூல நாட்டமும் அழிக்க வல்ல இருதய நடுச் சுயம்பு சற்குரு வாழி! அவரைப் பரிபூரணமாகச் சரணடைவோம்!

தலையுச்சியாகிய சஹஸ்ரார சக்கரத்தில் கொக்கி போடப்பட்டால், அக்கொக்கி நீக்கப் படாத வரை, பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் பெறவே இயலாது.

கிறித்துவப் புனித வேதாகமத்தில் தலையுச்சியை தேவனாகிய பரமபிதாவுக்குத் தவிர வேறெதற்கும், வேறெவருக்குந் தரக்கூடாது என்ற எச்சரிக்கை இருக்கிறது.

எனவே எதற்கும் எவருக்குங் காலில் விழும் பழக்க தோஷத்திலிருந்து நாம் அவசியம் விடுபட வேண்டும்

காலில் விழுந்து கால புருஷனுக்குத் தலையுச்சியை தானமாகக் கொடுக்கும் மடமையிலிருந்து நாம் முழுதாய் விடுபட வேண்டும்.

No comments:

Post a Comment