Saturday, June 25, 2016

சுயம்பு சரணம்

இருதய நடுவுள் அகண்ட விழிப்பாம்
ஒரேகுரு சுயம்பு சரணம்

இருதய நடுவுள் அம்மை யப்பராம்
ஒரேகுரு சுயம்பு சரணம்

இருதய நடுவுள் ஆதி நிச்சயம்
ஒரேகுரு சுயம்பு சரணம்

இருதய நடுவுள் ஞானம் ஓதி
ஒரேகுரு சுயம்பு சரணம்

இருதய நடுவுள் கோடா நீதி
ஒரேகுரு சுயம்பு சரணம்

இருதய வாயுள் இனிக்கும் போதி
ஒரேகுரு சுயம்பு சரணம்

இருதய வாயுள் பனிக்குஞ் ஜோதி
ஒரேகுரு சுயம்பு சரணம்

எங்கு தேடினும் இல்லார் என்னகத்
துள்ளார் கைப்பிடித் திழுத்தடி யேனைத்
தன்னுள் ஈர்க்கத் துடிப்பார் நல்லார்
வல்லார் சுயம்பு சற்குரு சரணம்

எனதுட் சத்து எனதுட் சித்து
எனதுள் ளின்பு எனதுட் சத்தி
எனதுட் சித்தி எனதுண் ணிறைவு
சுயம்பு சற்குரு சரணம்

உண்ணிறைவு = உள் நிறைவு

எனதுள் ளன்பே எனதுள் ளறிவே
எனதுள் ளின்பே சுயம்பு குருவே
நின்னுள் என்னை ஈர்த்தே இன்னே
நின்போல் மாற்று சரணடைந் தேனே

ஈனன் என்னை நின்பால் சேர்த்தேன்
தான மாக நின்னைத் தருவாய்
நீயே யன்றி சார்பு வேறிலேன்
தாயே சுயம்பு குருவே சரணம்

நாயேன் என்னை நின்பால் சேர்த்தேன்
நாய னாகித் தழுவிக் காப்பாய்
நீயே யன்றிப் புகலிடம் வேறிலேன்
எந்தாய் சுயம்பு குருவே சரணம்

நாயன் = நாயகன்

ஈயேன் என்னை நின்பால் சேர்த்தேன்
பேரீ கைகொண் டாய்எனைக் காப்பாய்
நீயே யன்றித் தஞ்சம் வேறிலேன்
தேவே சுயம்பு குருவே சரணம்

No comments:

Post a Comment