எல்லாஞ் சரியான
சுத்த சமரசம்
மின்னிட அழுத்துஞ்
சற்குரு சரணம்
சித்தத் தெளிவின்
மொத்தமும் உச்சிமேல்
வைத்தே அழுத்திய
சற்குரு சரணம்
பேசா வெழுத்தின்
ஊசி முனையால்
அகக்கண் திறந்த
அகத்தர் சரணம்
புத்தம் வெளிப்பட
புத்தி ஒளியுற
அமர்ந்தாய்ப் பிடரிமேல்
சுயம்பே சரணம்
கருமனம் பொடியத்
திருநீ றுபெருக
நெற்றியை வெளுத்த
சற்குரு சரணம்
தனது பேரில்
குழுமம் ஆக்கி
இயக்குஞ் ஞான
சுயம்பே சரணம்
திடுமென எழும்பித்
திரும்பென அருளி
இருதய நடுவைத்
திறந்தாய் சரணம்
உருவைக் குருவென
சரணம் போடா
திருத்தும் இருதய
குருவே சரணம்
பார்ப்பான் சாதி
நீர்த்துப் போகத்
தூர்த்தாய் என்னைத்
தூயோய் சரணம்
இற்று வீழுந்
துச்ச மென்னை
நிற்க வைத்தாய்
உச்சஞ் சரணம்
விழித்திரு தனித்திரு
பசித்திரு எனவுரை
தவத்திரு அடிகள்
அகக்குரு சரணம்
இறவாப் பிறவாச்
சிறப்பைப் பொதுவாய்
வைத்தாய் இருதய
எந்தாய் சரணம்
பொதுவாய் = யார்க்கும் உரிமையாய்
வள்ளல் உன்னை
இன்னே சுயம்பெனச்
சுட்டும் இருதய
அன்னே சரணம்
சுயம்பு ஆயிரம்
சகத்தே ஆக்க
தயவாய் எழும்பும்
அகத்தோய் சரணம்
தேய்த்துப் பதியுங்
குருவி ஒன்றைத்
தாய்வழி தந்தோய்
குருவே சரணம்
தேய்த்துப் பதியுங் குருவி = smartphone
தாய்வழி = தாயுருவாகிய என் மகள் மூலம்
கருமாந்திர மில்லோய்
தருமாந்த மானோய்
இருதயநடு உள்ளோய்
சுயம்புதேவே சரணம்
No comments:
Post a Comment