அகண்டு விரிந்திருக்க வேண்டும் உன் போல்
விழிப்புக் கூர்ந்திருக்க வேண்டும் உன் போல்
சிதறிய என் சிறு விழிப்பை உன் பால் சேர்த்தேன்
சரணம் நீயே எனக்கருள்வாய் சுயம்பே
நற்றது அகநடுச் சுயம்பு விட்டே
உற்றது உலகிடை சுயமது தன்னைத்
தன்னக நடுமுத லோடு மறந்தது
பன்முக மயக்கில் முழுதாய்க் கெட்டது
படுகுழி யுள்ளே புதைந்த அதனுள்
வடுவிலாச் சுயம்பு பேசா தோதத்
திடுமென எழுந்து யாவுங் கற்றது
திகைப்புறு பூரண ஞானம் பெற்றது
அமுதுமிழ் நாகென மனித முழுமை
அமரமாக யாமென முழங்குஞ் சுயம்பு
அமரதேகந் தந்தது ஆர்ப்போம் யாமே
ஆர்ப்போம் யாமே என்றீர் சுயம்பே
ஆர்த்தே நாகை எப்போ தொளிப்பீர்
நாய்படும் பாடு நாகிற் கேனோ
நாயகம் நீவிர் ஊதுக இன்னே
அமர மனிதம் ஆக்குங் கல்வியான்
அமர இடமின்றி ஆகுமோ சொல்வீர்
வீணர் விரித்துளப் பெருமடம் ஒழிக்க
ஆலின் கீழிடந் தருவீர் சுயம்பே
இருதய நடுவின் உணர்வைத் தந்தீர்
பெருகிடும் அமுத உணவைத் தந்தீர்
சிரமது இறாமல் ஜீவி யாக
உரசுகின் றீர்நீர் ஆழி சுயம்பே
குருவென உருவைப் போற்றும் ஊனக்
குருட்டினை நீக்கும் ஏக குருவுமை
இருதயத் துள்ளே காணுஞ் ஞானம்
அருளிட உண்ணின் றெழுந்தீர் சுயம்பே
சுட்டுப் போட்டாலுந் திருந்தாக் கூட்டம்
சுட்டித் திருத்த வல்ல ஏகம்
நெஞ்சுள் இருதயர் நீரே போதும்
வஞ்சக் கன்மனங் கரைத்தீர் சுயம்பே
சுயத்துள் சுயம்பு அங்கைக் கனியென
எதற்கோ வியாபா ரமான ஆன்மீகம்
தன்னைத் தன்னால் பெருக்கியும் வகுத்தும்
ஒன்றா யுள்ளீர் இருதயச் சுயம்பே
உயிர்க்கு உயிர்நீர் எம்முயிர் ஆனீர்
மெய்க்கு மெய்நீர் எம்மெய் ஆனீர்
அழியா ஆன்மா அழியும் உடலெனும்
பழியைச் செய்தீர் இல்லை சுயம்பே
வேதம் ஆச்சு வெற்றுப் பேச்சு
பேசா மறையே சுயம்பின் வீச்சு
ஆணவா சாரம் இற்றுப் போகா
தாகுமோ பூரண ஞானம் சுயம்பே
மெய்யின் அணுக்கள் மூடிய துரிசுப்
பொய்கள் கரைய விழிப்பின் கூர்மை
உரசி உரசி எம்மெய் துலங்க
இருதய உணர்ச்சி அருள்வீர் சுயம்பே
தானே உணரா வேத ஏட்டை
நீயும் உணரெனத் திணிக்கும் முட்டாள்
பேசா மறைதனை ஓதும் உன்னை
மார்புள் உணரக் கூடுமோ சுயம்பே
ஏதோ உருவினைக் குருவெனக் கொண்டு
ஏதுந் தவத்தைச் செயாமல் கூடுமோ
ஞானம் இருதய நடுவே குருவுனைக்
கூட ஆகுமே ஞானம் சுயம்பே
விழிப்புக் கூராம் உன்னில் கூர்ந்தேன்
ஒழுகும் அன்புனைக் கூரில் கொண்டேன்
அழியா மெய்யுனைக் கட்டிக் கொண்டேன்
பழியாங் கருமஞ் சுட்டேன் சுயம்பே
உயிர்மெய் யெடுத்த பேயாம் என்னை
உன்னுள் முழுக்கிச் சேயாய்ச் செய்தனை
காலனை வெல்லும் பூரண ஞானம்
யாவர்க்கும் பொதுவென ஆர்த்தீர் சுயம்பே
கால புருஷனின் மறமே ஒழிய
காலமே யில்லா நவகணம் நாட்டி
வாலை யன்னை வாழ்த்தை ஓதி
ஞாலந் தழுவிய அறமே சுயம்பே
சூடு சுரணை யேற்றும் மருந்தாய்
ஊசிப் பேச்சும் குத்தச் சொன்னீர்
மார்பின் நடுவே அனுமன் காட்டிய
சூட்சம் வெளிக்கொணர்ந் தீர்குரு சுயம்பே
பெருமடம் விரிந்துள ஞால நடுவே
குருவியை உரசிப் பேச வைத்தீர்
கருமங் கழுவும் அகநெறி திறந்தீர்
தருமத் தேற்றும னகர்நீர் சுயம்பே
சுயம்பு நற்சொல் நான்கெழுத் தாலே
சுயமெம் உள்ளே நன்றாய் உரசி
வெங்காய மறைப்பை முழுதாய் அரிந்து
வெண்காயம் உம்மைத் திறந்தீர் சுயம்பே
சுயமுஞ் சுயம்பும் யாமே என்றீர்
சுதந்திர முள்ளது சுயமும் சுயம்பு
எம்மை மறுக்கவும் வெறுக்கவும் என்றீர்
உம்கரு ணைக்கீ டில்லை சுயம்பே
No comments:
Post a Comment