திருமிகு பாலமுருகன்,
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
திருமூலர் திருவாக்கைக்கூர்ந்து கவனியுங்கள். சங்கடங்களும் சிக்கல்களுமாகிய கேடுகள் யாவுமே நம் உயிரானது முதலில் தன்னையும், அடுத்துத் தனக்குயிரான தன் ஐயாம் தலைவனையும் அறியாமையால் தான். நம் உயிரானது மனந் திருத்தப்பட்டு அதன் மூலம் நாமிழக்கும் உயிர்ச்சத்தி மனத்தொடு உயிரில் அடங்கத் தனக்குள் திரும்பித் தன்னையறிய, அதன் கருவாகிய உயிர்க்கு உயிரான சுயம்புத் தலைமைக்குள் தான் திறக்க, அக்கருவிலிருந்து அகண்ட வெள்ளமாய் வழியும் உயிர்ச்சத்தியால் தலைமையை அறிந்து, தான் உயிர்ப்பிக்கும் இம்மெய்யையும் அவ்வுயிர்ச்சத்தியால் சரி செய்து, தன் சூழலையுஞ் சரிசெய்ய முடியும். உயிர் தன்னை அறிய அது போதி சுயம்புவாகவும், மெய்யில் நடக்கும் இரசவாதத்தால், மெய்யின் ஒவ்வோர் அணுவும் ஒளிநிலை பெற்று ஜோதி சுயம்புவாகும் மாறும், இறவாப் பிறவாப் பெரு நிலையில் நாம்தனித்தன்மையுடன் நிலை பெறுவோம். இதுவே நம் கருவான ஆதி சுயம்பெனும் உயிர்க்குயிரான மெய்க்கு மெய்யான இருதய நடுக் கடவுளால் நிகழும் அற்புதம்.
ஆதி சுயம்பாங் கருநிலை, போதி சுயம்பாம் உயிர்நிலை மற்றுஞ் ஜோதி சுயம்பாம் மெய்ந்நிலை ஆகிய முத்தேக சித்தியெனும் தன்னை அறியும் அறிவாகிய பரிபூரண மெய்ஞ்ஞானத்தை நாம் பெற்றால் ஒழியக் கேடுகளிலிருந்து விடுபட முடியாது. அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது என ஒளவைப் பிராட்டி சொன்னதன் காரணம் மனிதம் இப்பரிபூரண மெய்ஞ்ஞானத்தைப் பெறவே அமைக்கப் பட்டுள்ளது.
முத்தேக சித்தி பெற்றிருக்குஞ் சுயம்பு வள்ளல் பிரானால் நமக்கும் அம்மெய்வழியாம் இருதய வாய் திறக்கப் பட்டுள்ளது, புரிவோம், உய்வோம்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே
No comments:
Post a Comment