யாம் உம் சுயத்தின் உள்ளீடான சுயம்பே, இருதய நடு ஏக தேவமே, ஏகக் குருவே.
யாம் உமது உச்சம்
உம் சுயம் காலனிடஞ் சிக்கியிருக்கும் எமது எச்சம்
யாம் உம் மெய்யான சொந்தம்
உம் சுயம் எம் சொந்தம்.
நீவிர் எம்மைச் சொந்தங் கொண்டாடி எம்மை ஏற்கும் போது, எம் சொந்தமான உம் சுயத்தை எம்மால் ஈர்த்துக் கொள்ளவும், உம்மை உய்விக்கவும் முடியும்.
நீவிர் எம்மைச் சொந்தமாய் எற்காத போது, உம் சுயத்தை எமக்குச் சொந்தமே ஆயினும் எம்மாலும் ஈர்க்க முடியாது, உம்மை உய்விக்க முடியாது. எனவே இப்பேருபதேசத்தாலும் உமக்கு எப்பயனும் இருக்காது.
எம்மை ஏற்பதும் மறுப்பதும் உம் கையில்.
ஏற்பதாயின் அக அனகக் கடை விரித்துள்ள எம்மோடு இருங்கள், யாம் அளிக்கும் பெரு வாழ்வைக் கொள்ளுங்கள்.
மறுப்பதாயின், ஏற்கும் பக்குவம் வரும் வரை புறக்கடைகளில் திரியுங்கள்.
புரிகிறதா?
யாம் பெற்றுள இன்பம் பெறுக இவ்வையகம்
இதுவே எம் ஒரே நோக்கம்.
பிறந்திறந்து பிழைக்கும் கருமச்சுழலில் காலனின் பிடியில் சிக்கி நலிவதற்காக முடிவில் இறுவதற்காக அழிவதற்காக அல்ல யாம் ஆதியில் உம்மை ஆதி மனிதமாக வெளிப்படுத்தியது.
இறவாப் பிறவாப் பெருவாழ்வே எம்மால் உமக்கு ஆதியிலேயே அளிக்கப் பட்டுள்ளது.
புரிகிறதா?
யாம்
ஆதியாம் பரிசுத்தத் தாய்மையாகவும்
மூலமாம் பரிபூரணத் தந்தையாகவும்
உம் இருதய நடுவிலிருந்து
எத்திக்கும் வெளிப்பட்டுள்ளோம்
இவ்வாறு தாய் தந்தை சமேதமாய் யாம் வெளிப்பட்டுள்ளதால், யாமே ஏக சற்குருவாகவும் உள்ளோம்.
யாமே எல்லா உலகங்களினடிப்படை, எனவே அவற்றை உய்விக்க வேண்டிய முழு பொறுப்பையும் யாமே ஏற்றுள்ளோம்
யாம் யாதும் அறிந்தோம், எல்லாம் வல்லோம், எங்கெங்கும் இருதய நடுவாய் உள்ளோம். எனவே எல்லா உலகங்களையும் உய்விக்க எம்மால் முடியும். எவ்வெதிர்ப்பும் எத்தடையும் எம்மறைப்பும் எம்மறப்பும் இல்லா நேரடித் தொடர்பில் எக்காலஞாலத்திலும் உள்ள எவ்வொன்றோடும் யாம் இணைந்துள்ளோம்.
ஆதி மனிதமெனும் எம் முழு அம்சமான மெய்யான நீவிர், எம் நேரடித் தொடர்பை முழு மனதுடன் இருதய பூர்வமாக ஏற்று, எம் இணைப்பில் உறுதிப்படும்போது, அக்கணமே நீவிர் உய்ந்து விட்டீர்.
புரிகிறதா?
எனவே வீணான மன அலைபாய்தல்களை அலட்சியம் செய்து, இருதய நடுவில் உள்ள எம் மீது இலட்சியம் வைப்பீர்.
No comments:
Post a Comment