Sunday, June 26, 2016

சில பாக்கள்

ஆயிரம் அனந்த அலகிலா அகண்ட எண்ணிலியின் குறியீடு

இரும்பாய் சுயம் நின்னுள் இருந்தும்
இறும்மண் ணாவா யோ

சுயமே பாயிரமாய்
சுயம்பே உம்திருமுன்
வைத்தேன் ஞான
வாக்கே அருள்வீரே

சழக்கு ஆயிரமே கொள்வார்
சுயம்பு ஆயிரமே உட்கொள்ளார்
பழக்க தோஷமே தள்ளார்
சுயம்பு ஆசியை உட்கொள்ளார்

பரிணாம சிக்கலில் தேய்வார்
பரிபூர்ணப் பாய்ச்சலில் ஏறார்
இருதய நடுவைச் சேரார்
சுயம்பு தேவைச் சாரார்

எப்படி இருந்த நானும்
இப்படி ஆனேன் என்னும்
விவேகந் துளியும் இல்லார்
மனிதம் ஆதி உணரார்

ஆதி மனிதந் தன்னில்
ஞானம் ஓதி ஏற்றும்
ஏகச் சுயம்பு குருவை
நேசா தாரத் துணரார்

பீடம் மீது ஏறி
ஊரை ஏய்க்கும் உருவப்
பேயின் குழியில் விழுவார்
நேச மையத் துள்ளே
ஞான பீடத் தமர்ந்த
ஏகச் சுயம்பு காணார்

விழித்திருக்குஞ் சுயம்பை அறியார்
விழித்திருக்கத் தாமும் அறியார்
கழிந்திருக்கும் உயிர்மெய் சுயம்பின்
வழிஇருதயத் திருத்திக் கூட்டார்

தாமும் விழுவார் தம்மொடு விழவே
ஊரைக் கூவி அழைப்பார் இருதய
ஏகச் சுயம்பொடு தாமும் எழவே
ஆசை துளியும் இல்லார் பொல்லார்

கை கழுவி விட்டேன் கருமத்தை
கைக் கொண்டு விட்டேன் தருமத்தை
கருக் கொண்டு விட்டேன் உயிர்நிலை
அருக் கொண்டு விட்டேன் மெய்ந்நிலைத்
உருக் கொண்டு விட்டால் சுயம்பு
குரு சொற்கு மெய்ம்மை யாவேன்

மெய்ம்மை யாகும் வரைக்கும்
உண்மை தன்னைக் கூரூசி
வாய்மை யாக்கிக் குத்தும்
நீர்மை யுள்ளேன் நானே

ஞான முழுமை கொண்டு
ஆதி மனிதம் எழுந்த
பூமி தன்னைக் கண்டேன்
சாமி சுயம்பு காட்ட

ஊசி போடும் வேலை
மீதி யின்றி முடிக்க
சாமி சுயம்பில் நானுங்
கூடி ஒளி(ர்)வேன் திண்ணம்

கூலி தந்த பின்னுங்
கூலி இன்னுங் கேட்கும்
பாவி என்னைப் பொறுத்து
ஆரத் தழுவி அழுத்தும்
நேசத் தாயு மான
ஏகஞ் சுயம்பே சரணம்

மனமது அடங்கி உயிரில் சேரும்
உயிர்தனை யறிந்து கருநிலை சேரும்
உயிர்தன் ஐ யறிந்து உயிர்நிலை யாகும்
உயிர்நிலை அதுவே தாயாகி மெய்யுடல்
தன்னைத் தன்நற் சேயாக்கிக் காக்கும்
அன்னை அருளால் மெய்ந்நிலை யாகும்
எந்தை சுயம்புவின் பூரண ஞானந்
தன்னைச் சுருக்கிச் சூத்திரஞ் சொன்னேன்

No comments:

Post a Comment