இலட்சியம் நினது வாரா திருந்தால்
இலட்சங் களில்யான் புரண்டிருக் கலாம்தான்
வள்ளலுன் அருளை உறுதியாய்ப் பெறவே
வற்றவைத் தாயோ பொருளைச் சுயம்பே
ஓசி வீடு ஓசிச் சோறு
ஓடி விட்டது சுயமரி யாதை
ஒட்டிக் கொண்டுளாய் இருதய நடுவே
ஓட்டி விடவுனை அறியேன் சுயம்பே
வயிறு கழுவும் ஈன வாழ்க்கை
வருந்தயான் விதித்தது நீயல வென்றால்
வருத்தம் நீங்கும் உண்ணா நிலையை
வரமாய்த் தரஏன் தாமதஞ் சுயம்பே
உண்ணா நிலையது வரவே முதலில்
உறங்கா நிலையது வரணு மென்றால்
விரைவாய் நிலையது வரமாய்த் தரவே
விரைவாய் இன்னே எந்தாய் சுயம்பே
உறங்கா நிலையது வரவே கரும
உறவறு தரும நிலையது தந்தாயோ
சிறுமனச் சேயென் புலம்பலே நீங்க
சிறப்புறு தந்திரஞ் செயவா சுயம்பே
நின்முன் அறிக்கை இட்டே எல்லாஞ்
சொன்னேன் வெட்கம் இல்லை நீயே
எந்தாய் என்தாய் குருவு மானோய்
நின்னை அடைந்தேன் சரணஞ் சுயம்பே
விடுத்தாய் என்னை நீயே சுயம்பே
எடுப்பாய் என்னை நீதான் சுயம்பே
கொடுத்தாய் எல்லாம் என்றாலுஞ் சுயந்தான்
எடுக்க அறியா ஏழை சுயம்பே
விழவே மண்ணில் இறவே விதித்தாயோ
உழலும் பிழைப்பும் பேதைமைப் பிறப்பும்
சுழலுங் கருமமுந் தான்நீ விதித்தாயோ
பழம்பொய் யிதறவே எழுவாய் சுயம்பே
எழவே மெய்விண்ணில் அறவுருவாய் விதித்தாய்நீ
உயிரே தன்னையுந் தன்'ஐ'யு மறிந்து
உயவே உயிர்நிலைப் போதியுறவே விதித்தாய்நீ
உணரச் செய்வாய் உண்மையைச் சுயம்பே
இட்டுஞ் சுட்டும் அழுதே பழகிநீ
சுட்டும் மெய்யை உணரார் சுயம்பே
இற்றுப் போவதே விதியென நொந்துநீ
கற்றுத் தருவதைக் கொள்ளார் சுயம்பே
பித்துப் பிடித்த இவரைத் திருத்த
சுத்த சிவமுன் னால்தான் முடியும்
சத்தி யருளொடு இருதய நடுவில்
குத்தித் தெருளளி குருவாஞ் சுயம்பே
ஒவ்வோர் மெய்யணுவும் அகண்ட ஜோதி
என்றோர் சுயம்புவாய்த்தான் விடியும் அற்புதம்
கருநிலைத் தந்தையாய் உயிர்நிலைத் தாயாய்
இருதயத் தினின்று புரிவாய் சுயம்பே
சிற்றறி விருக்குஞ் சிரத்தில் ஏறிச்
சித்தெனச் சத்தோ டின்புற் றிருக்கும்
இருதயப் பேரறி வஃதே உரச
கருமனக் கல்லுங் கற்பூ ரமாச்சே
ஒருவன் ஒருத்தி சற்குரு மும்மைப்
பெருமான் நின்பே ரற்புதஞ் சுயம்பே
நெஞ்சக் கனகல் நெகிழ்ந்தே உருக
வஞ்சங் கழிந்த பாத்திரம் என்னில்
நிரம்பியே வழியும் பாயச மாச்சு
வரமதை வைத்தேன் பொதுவில் சுயம்பே
உள்ள ஒன்றாய் உள்ளத் தொன்றாய்
உள்ள உள்ளப் பொங்கும் விழிப்பாய்
உள்ள உன்னை உள்ளே கடந்தே
கொள்ள உள்ளோம் யாமே சுயம்பே
பொதுவில் வைத்தோம் நம்மைச் சுயம்பே
பொங்கி வழியும் பூரணம் யாமே
பொங்கல் உண்ணத் தடைகள் இல்லை
உண்ணுஞ் சுயங்களா குஞ்சுயம் பாயிரம்
சுயம்பாயிரம் = சுயம்பு ஆயிரம்
உண்ணுஞ் சுயங்கள் = சுயம் பாயிரம் = சுயம்பு ஆயிரம் என்னும் பெருங் காப்பியத்திற்குப் பாயிரமாகும் வாழ்த்தாகுஞ் சுயங்கள்
ஒளிவு மறைவின்றி வைத்தோம் நம்மை
ஒளிரும் மெய்வழி இருதயந் திறந்தோம்
சிரமும் இறாமல் ஜீவி யாக
வரமுந் தந்தோம் யாமே சுயம்பே
இறாமல் = இற்றுப் போகாமல், அழியாமல்
புறத்தே சுத்தம் நன்றே செய்வார்
அகத்தே சுத்தம் ஏனோ செய்யார்
ஒன்றாம் உன்னைக் கைப்பிடி யாமல்
குன்றாம் அசுத்தம் பிடித்தார் சுயம்பே
அகத்தே உன்னை மணந்து புணரார்
சகத்தே எல்லாம் மணந்து புணர்வார்
யுகமே முடிந்த நவகணம் உணரார்
சுயத்தே யுளவுனை அறியார் சுயம்பே
No comments:
Post a Comment