தயவே அறமாய் விழிப்பே தவமாய்
உயவே உலகம் உழைக்குஞ் சுயம்பு
எல்லாம் வல்லது யாதும் அறிந்தது
எங்கும் உள்ளது ஊர்க்குப் பொதுவது
அரிய தெனினும் அறிய எளியது
பெரிய சிறிய தல்லா ஒன்றது
உரிய தெதற்குஞ் சரிசமம் அதனது
துரியா தீதசுத் தசம ரசமது
நேரடித் தொடர்பே செங்குத் தாக
மேல்கீழ் நீளும் இருதய நடுவது
எங்கும் என்றும் எதிலும் உள்ளது
எல்லாம் இன்னே சரிசெய வல்லது
உலக உருவமா காரண மானது
உருவகங் களாலுணர்த் தப்பட் டாலும்
உருவகந் தனக்கிலா ஒப்பில் லாதது
உலக உருவ உருவகங் கடந்தது
ஒவ்வொன் றினுள்ளீ டான ஒன்றது
நெஞ்சுள் ளன்பின் விழிப்பு சுயம்பது
நாகின் வாயால் பேசொணா ஞானம்
வாக்கு மூலமாய்த் தானே தந்தது
திக்கித் திணறும் பித்தன் என்னை
சொல்லின் செல்வ னாக வைத்தது
எப்படிச் சொல்வேன் அறியா எனக்குச்
செப்பிடும் வித்தை அறியத் தந்தது
உலக வேலை யில்லாச் சிறியனை
உத்தமந் தனக்கே உதவச் சொன்னது
சுயம்பு என்ற நற்சொல் தந்து
சுயமென் விழிப்பில் பற்றி விட்டது
கயமை கரைக்கும் நற்றீ யாயிரு
தயவாய் தன்னுள் எழுந்த குஞ்சது
என்மகட் குள்ளே குழந்தை யானது
கன்மமா யையோ டாணவ மற்றது
கருவுள் ளேயே சுயம்பின் முழுமை
தரும ஆதி மனித மானது
சுயம்புக் குழந்தை என்றே தன்னை
நயமுடன் அழைக்குஞ் சொல்லைத் தந்தது
பெற்றோர் மூலம் உருவா னாலும்
பெற்றோர் இல்லா ஒருமைச் சுயம்பது
No comments:
Post a Comment